Tuesday, November 30, 2010

எஸ்.ராவின் "பேசத்தெரிந்த நிழல்கள்"

நாவலையும்,சினிமாவையும் முறையே வாசகனுக்கும்,பார்வையாளனும் அணுகும்/அணுக வேண்டிய முறை குறித்து இக்கட்டுரையில் வாசித்த வரிகள் சத்தியமானவை.

இலக்கியத்தை வாசிப்பவர்கள் சொற்களின் வழியே ஒரு பிம்பத்தை தாங்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள்.அதில் காட்சிபடுத்துதல் தான் வாசகனின் வேலை.அதே நேரம் சினிமாவோ காட்சிகளை முன்வைக்கிறது.அதை தனது மனதிற்குள் சொற்களாக, நினைவுகளின் பகுதியாக மாற்றிக் கொள்வதை பார்வையாளர்கள் செய்கிறார்கள்"

திரைப்படங்கள்/நடிகர்கள் குறித்த தங்களின் விரிவான பார்வையாய் தமிழில் தொடர்ந்து முன்வைப்பவர்கள் எஸ்.ராவும் சாருவும்.என்னளவில் சாருவின் "தீராக்காதலி"(கே.பி சுந்தராம்பாள்)தொகுப்பு முக்கியமான ஒன்று.ரேயின் "பதேர் பாஞ்சாலி" குறித்த எஸ்.ராவின் 'பதேர் பாஞ்சாலி - நிதர்சன புனைவு" ,ஒரு திரைப்படத்தை மட்டுமே மையமாக கொண்டு தமிழில் வெளிவந்த முதல் நூல் என நினைக்கின்றேன்.நல்ல சினிமாவை,மறக்கடிக்கப்பட்ட நடிகர்களை தம் வாசகர்களுக்கு முன்னெடுத்து செல்லும் இம்முயற்சிகள் இப்பொழுது பரவலாய் காணப்படுவது மகிழ்ச்சிகரமானது.

எஸ்.ராவின் இந்த தொகுப்பு,முழுக்க முழுக்க ஒரு பார்வையாளனின் அவதானிப்பில் தமிழ்,மலையாளம் தொடங்கி உலகளவில் தான் ரசித்த திரைப்படங்கள்,குறும்படங்கள், விருப்பத்திற்குரிய நடிகர்கள்,நேர்காணல்கள் என தகவல்களை பகிர்ந்து கொண்டே செல்கின்றது.




சாவித்திரி,நடிப்பு ராட்சசி.நவராத்திரி திரைப்படத்தில்,மேடை நாடக காட்சியில்..முகத்தை வெட்டி,சிவாஜியிடம்,"அதாகப்பட்டது சுவாமி........." என கூறும் ஒரு காட்சி போதும் அவர் சிறப்பை பகிர.இத்தொகுப்பில் சாவித்திரி குறித்த கட்டுரையை(சாவித்திரி - இரண்டு பிம்பங்கள்) வாசித்து கொண்டிருக்கும் பொழுது,வைகை எக்ஸ்ப்ரஸ்ஸில் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி புத்தகத்தை வாங்கி ஆர்வமாய் அதை மட்டும் படித்துவிட்டு திருப்பி தந்தார்.கூடவே சாவித்திரி குறித்து தனக்கு தெரிந்த செய்திகளை சொல்லி கொண்டே வந்தார் சோகத்துடன்.அந்த நடிகையின் இறுதி நாட்கள் குறித்த உருக்கமான கட்டுரை அது.

"சிரித்தால் மட்டும் போதுமா?",நடிகர் நாகேஷை குறித்த இக்கட்டுரை அந்த மாபெரும் கலைஞன் குறித்த தகவல்களோடு அவருக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரம் குறித்தும் பேசுகின்றது. விருதுகளுக்கும் மேலான சிறப்பு ரசிகனின் வரவேற்பே.தருமியும்,செல்லப்பாவும் எளிதில் மறக்க கூடியவர்கள் அல்லவே!மொழி கடந்து சில நடிகர்கள் எளிதில் கவர்ந்து விடுவார்கள்.மலையாள நகைச்சுவை நடிகர்கள் ஜெகதி, ஜகதீஷ்,இன்னொசன்ட் எப்போதும் என் விருப்பதிற்குரியவர்கள்.ஜெகதியும்,இன்னொசென்ட்டும் இல்லாத படங்களே இல்லையா என்று கூட தோன்றும்.இத்தொகுப்பில் "நகைச்சுவை நாயகன்" கட்டுரை ஜெகதி குறித்தானது.

ராஜாவின் திருவாசகம்,முதன்முதலில் கேட்டது ஒரு இரவில்.ராஜாவை அதிகமாய் பிடித்து போன தருணங்களில் அதுவும் ஒன்று."எத்தனை கோபுரங்கள் இருந்தாலும்,தஞ்சை கோபுரம் தனித்துவமானது,ராஜாவும் அது போலவே" என்ற இயக்குனர் பாசிலின் வரிகள் நினைவிற்கு வருகின்றது.திருவாசக இசையில் கரைந்து உருகிய தருணங்களை பதிவு செய்கின்றது "திருவாசகம் கேட்ட பொழுது" கட்டுரை.(ராஜாவின் பாடல்கள் குறித்து விரிவாக எழுத வேண்டும்..எப்பொழுதிற்குமான இசை).

"Wind Migration " மற்றும் "The Forgotten Woman " ஆகிய இரு ஆவணப் படங்கள் குறித்த தகவல்கள் பார்க்கும் ஆவலை தூண்டுபவை.Wind Migration ஆவணப்படத்தின் பல பகுதிகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.பறவைகளின் தீரா பயணத்தில் கொஞ்சம் நாமும் உடன் பயணிக்கும் சுவாரஸ்ய அனுபவம்."The Forgotten Woman ",மதுரா நகரில் தனித்து விடப்பட்ட விதவைகளை குறித்தது.உணவிற்கும்,இருப்பிடத்திற்கும் வழியின்றி எஞ்சிய நாட்களை விதியின் வசம்விட்டு தொடர்ந்து கொண்டிருக்கும் அவர்களின் நிலை குறித்த இப்படத்தை இயக்கியிருப்பவர் திலீப் மேத்தா(தீபா மேத்தாவின் சகோதரர்).

மதுரை இருந்த நாட்களில் உலக சினிமா பார்ப்பதென்பது ஏழு கடல்,ஏழு மலை தாண்டி அடைய வேண்டிய காரியம் என்றிருக்கும்.ஹாலிவுட் படங்கள் குறித்து மட்டுமே அறிந்திருந்த காலம் அது.இணைய அறிமுகத்திற்கு பிறகு அதிகமாய் உலக சினிமா குறித்து அறிமுகம் கிடைத்தது எஸ்.ரா மற்றும் சுரேஷ் கண்ணனின் "பிச்சைபாத்திரம்" வலைத்தளங்களின் வழியே.தேசத்திற்கு தேசம் வேறுபடும் கலாசாரத்தையும்,வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள திரைப்படங்களை தவிர்த்து வேறு எளிமையான வழியிராது.அவ்வகையில் இத்தொகுப்பில் கோடிட்டு காட்டப்படும் ஆசிய/பௌத்த/வியட்நாமிய திரைப்படங்கள் எண்ணற்றவை.

ஹாலிவுட் திரைப்படங்களில் இருந்து பிற தேச திரைப்படங்கள் வேறுபடம் விதம் குறித்தும்,திரைப்பட வகைகள் குறித்தும் விரிவாய் அலசும் "ஆசிய - சினிமாவின் குவிமையம்'கட்டுரை முக்கியமான ஒன்று.மேலும் ஒரு குறிப்பிடதக்க பதிவு,அகிராவுடன் இரானிய இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியின் உரையாடல்.தொழில்முறை நடிகர்கள்,சர்வதேச விருதுகள்,மிகை நடிப்பு,தற்கால சினிமா குறித்தான அகிராவின் பார்வையை முன்வைக்கும் கட்டுரை.

இத்தொகுப்பின் கட்டுரைகள் சினிமாவை அணுகும் முறை குறித்தோ,அதன் நுணுக்கங்கள் குறித்தோ நமக்கு பாடம் சொல்லுபவை அல்ல.மாறாக அனுபவ வாயிலாக அறிமுகங்களை தந்து, நம் நினைவுகளையும் மீட்டெடுக்கும் முயற்சி.சினிமாவின் மீது தீராக்காதல் கொண்டவர்கள் தவறவிடக் கூடா வாசிப்பு!

வெளியீடு - உயிர்மை

9 comments:

KarthigaVasudevan said...

இந்த தொகுப்பில் சிலவற்றை எஸ்ராவின் தளத்திலும் கொஞ்சம் வாசித்திருந்தேன் .பிறகு புத்தகமாகவும்.

நான் வாசித்துக் கொண்டிருக்கும் போது மானிட்டரில் சாவித்திரி புகைப்படத்தை பார்த்து அம்மா ரொம்ப நொந்து போனார் :(

Wind migration குறித்து எஸ்ரா எழுதி இருந்தது அவ்வப்போது ஞாபகம் வந்து கொண்டே இருக்கும் சமீபத்தில் சாம்ராஜ் என்பவர் காட்சி தளத்தில் எழுதி இருந்த தலைப்பு மறந்து விட்டது,சென்ஷி ரீ ஷேர் செய்திருந்தார். பள்ளிக்கரணை சதுப்புநில ஆக்கிரமிப்பு பற்றிய கட்டுரை கூட லேசாக இந்த ஆவணப் படத்தை மறுபடி பார்க்கும் எண்ணத்தை தூண்டிச் சென்றது.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம் பற்றிக் கூட இந்தப் புத்தகத்தில் சுவையான தகவல்கள் நிறைய உண்டு.

இன்னொசன்ட் :) எனக்கும் பிடிக்கும்.

புத்தகம் கையில் இருக்கிறது,மீண்டும் இன்று வாசிக்கப் போகிறேன்..

Thanks for sharing Lekha.

:)

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள் லேகா,.

சினிமாவில் இணைந்த பின்பு உள்ள எஸ் ரா,
இணையும் முன்பு இருந்த எஸ் ரா

குறித்து தாங்கள் விரிவாக பதிவு எழுத ஆசைப் படுகிறேன்

அன்பேசிவம் said...

நல்ல புத்தகம் லேகா, நானும் வாசித்தேன்.

நல்ல கேள்விதான் ராமிஜி, இதை லேகா எழுதுவாங்கன்னுதான் நினைக்கிறேன். :-)

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்ல பதிவு. உங்களின் ஆழமான விமர்சனம் புத்தகத்தை படிக்கத் தூண்டுகிறது.

a said...

//
தேசத்திற்கு தேசம் வேறுபடும் கலாசாரத்தையும்,வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள திரைப்படங்களை தவிர்த்து வேறு எளிமையான வழியிராது
//
உண்மை.

புத்தக அறிமுகத்திற்க்கு நன்றி.......

நர்சிம் said...

பகிர்விற்கு நன்றி லேகா.

Ashok D said...

பகிர்வுக்கு நன்றி :)

லேகா said...

நன்றி கார்த்திகா,பஸ்ஸில் இப்புத்தகம் குறித்து விரிவாய் பகிர்ந்ததில் மகிழ்ச்சி :-)

நன்றி ராம்ஜி

நன்றி முரளி :-))

லேகா said...

நன்றி நர்சிம்ஜி :-)

நன்றி அசோக்

நன்றி கனாக் காதலன்

நன்றி யோகேஷ்