Tuesday, August 11, 2009

கி.ரா வின் "கொத்தை பருத்தி"...சிறுகதை தொகுப்பு

கி.ராவை வாசிக்கும் பொழுதெல்லாம் எங்கள் கிராமத்தின் நினைவுகள் வந்து போகும்..சம்சாரிகளின் வாழ்வை நகைச்சுவை கலந்து மிகையின்றி சொல்வதில் கி.ராவிற்கு நிகர் எவருமில்லை.1985 இல் வெளிவந்துள்ள இத்தொகுதியின் பெரும்பான்மையான கதைகள் கால சுழற்சி ஏற்படுத்தும் மாற்றங்களால் சம்சாரிகள் சந்திக்கும் இன்ப துன்பங்களை குறித்து சொல்பவை.மாற்றங்கள் வரவேற்க படவேண்டியபவையே நம்மை பாதிக்காதவரை..விவசாயம் அழிந்து வருவது குறித்த ஏக்கமும் அக்கறையும் கி.ராவின் எழுத்துக்களில் எப்போதும் காணலாம்..

"கொத்தை பருத்தி", விவசாய நிலம் இல்லாத காரணத்தால் பில்லா கலெக்டருக்கு பெண் கொடுக்காத செங்கன்னா நாயக்கர் பின்னாளில் விவசாயம் பார்க்கும் தனது பேரனுக்கு பெண் தேடி அலையும் கதை.இந்த கதையில் பெண் பார்க்க பில்லா கலெக்டரின் தந்தை செங்கன்னா வீட்டிற்கு வரும் காட்சியை கி.ரா நகைச்சுவையோடு விவரித்திருக்கும் அழகு..திரும்ப திரும்ப படிக்க தூண்டும்."அங்கணம்",குளிப்பதற்கும்,பாத்திரங்கள் கழுவவும் வீட்டின் பின் பகுதியில் இருக்கும் அங்கணம் குறித்த ஒரு வீட்டின் நினைவுகளை அதிக நகைச்சுவை கொண்டு விவரித்துள்ளார் இக்கதையில்..கி.ராவின் "நாற்காலி" சிறுகதையும் இது போலவே..சில பொருட்கள்,இடங்கள்,காரியங்கள் மீது ஏனோ மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுவதுண்டு,அவை குறித்த நினைவுகளில் மூழ்கி போவதில் ஒரு அலாதி சுகமுண்டு.




"ஒரு செய்தி", பகல் பொழுதுகளில் வயல்களில் ஓடி திரிந்தும்,மாலையில் ஊர் மந்தையில் கூட்டமாய் விளையாடி திரிந்த குழந்தைகள் தீப்பெட்டி தொழில் சாலைக்கு வேளைக்கு செல்வதை சோக செய்தியாய் தெரிவிக்கும் கதை.பரத்வாஜம்,ஆக்காட்டி குருவி,அக்காகுருவி என வித விதமான் பட்சிகளின் குரல் கேட்டு விடியும் கிராமத்து காலைகள், இப்பொழுதெல்லாம் நகரத்திற்கு குழந்தைகளை அழைத்து செல்ல வரும் பேருந்துகளின் ஹாரன் சத்தத்தில் திடுக்கிட்டு விழிப்பதை கொஞ்சம் கோபமாகவே பதிவு செய்துள்ளார்.இந்த சிறுகதை தொகுதியை பல வருடங்களுக்கு முன்பே படித்துள்ளேன்...மீண்டும் வாசித்த பொழுது இந்த சிறுகதை அப்பொழுது ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடிந்தது.கிராமம் ஒன்றில் கழிப்பிடம் அமைத்து அதை உபயோகிக்க அந்த மக்களை பயிற்றுவிக்கும் ஒரு சுகாதார அதிகாரியின் ஓயாத உழைப்பும்,முயற்சிகளும் பயனற்று போவதை தன் பாணியில் சொல்லி இருப்பார் கி.ரா.கழிப்பிட கட்டடத்தை சுகாதார கேடென கருதி முள் வேலியிட்டு அடைத்து வைத்திருக்கும் கிராமங்கள் இன்றும் இருக்கின்றன தானே??!!....


"இவர்களை பிரித்தது"...ஒற்றுமையாய் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த அண்ணன் தம்பிகள்..கால போக்கில் திருமணம்,பிள்ளைகளின் சம்பாத்தியம் என வாழ்கை சூழல் மாற தனியே தனியே பிரிந்து,பேச்சு வார்த்தை முறிந்து வீதியில் சண்டையிட்டு கொள்ளும் நிலைக்கு ஆளாவதை காரணங்கள் ஆராயாமல் சொல்லும் இக்கதை கூட்டு குடும்பங்கள் மலிந்து வரும் தற்பொழுதைய சூழலில் அதற்கான காரணங்களை யோசிக்க வைப்பதாய் இருக்கின்றது.இவை தவிர்த்து "குரு பூசை","சுப்பண்ணா","நிலை நிறுத்தல்.","உண்மை","விடுமுறையில்"..ஆகிய சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவையே.


இரவின் ஆழ்ந்த நிசப்தத்தில் இத்தொகுதியை படித்து முடிந்தேன்....என் கிராமம் குறித்த நினைவுகளை அதிகமாய் கிளறிவிட்டது இந்த வாசிப்பு.. .நகரத்தின் போலி நாகரிகமும்,சினிமாத்தனங்களும்,இயந்திர நடைமுறைகளுக்கு சிக்காமல் என் கிராமம் அதன் போக்கில் தொடர்ந்து கொண்டிருப்பதில் ஒரு நிம்மதி. மேலும் கி.ரா வை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற ஆவலும் அதிகரித்தது.அவரின் தற்பொழுதைய புதுச்சேரி முகவரி அறிந்த நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்.

வெளியீடு - அன்னம்

23 comments:

குப்பன்.யாஹூ said...

கி ரா எழுத்து பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி லேகா

முடிந்தால் அவரின் இடை சேவல் கிராமம் சென்று பாருங்கள் (கோவில்பட்டி திஎஉநெல்வெலி சாலையில் உள்ளது, குறிப்பிட்ட பேருந்துகளே நிற்கும்).

எஸ் ரா கூட எழுதி உள்ளார், இடை சேவல் கிராமத்தில் ஒரு நூலகம், புத்தக ஆவன காப்பகம் வைக்க வேண்டும் என்று.

பதிவிற்கு நன்றிகள்.

லேகா said...

வருகைக்கு நன்றி ராம்ஜி,

கி.ரா இடைசெவலில் வசித்த பொழுது அப்பா நேரில் சென்று பார்த்து வந்துள்ளார்கள்.அவர் புதுச்சேரி வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என நினைக்கின்றேன்..

Unknown said...

/-- அவரின் தற்பொழுதைய புதுச்சேரி முகவரி அறிந்த நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன். --/

நான் கூட நேரில் பார்க்க விரும்பும் ஆதர்ஷனங்களில் கி. ராவும் ஒருவர்.ஒரு பாண்டிச்சேரி நண்பரிடம் விசாரித்து அனுப்புமாறு கேட்டிருந்தேன். இதுவரை எனக்கு அனுப்பவில்லை. உங்களுக்கு அவரின் முகவரி தெரிய வந்தால் எனக்கும் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

லேகா, எழுத்தாளர் ஞானியின் வீட்டில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறுகளில் கேணி இலக்கிய சந்திப்பு நடக்கிறது.மூத்த படைப்பாளிகள் அதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார்கள். அடுத்த மாதம் அசோகமித்திரன் வர இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதற்கான அறிவிப்பு ஞானியின் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

http://www.gnani.net/

கடந்த மாதம் பாலு மகேந்திரா உரையாற்றினார்.

http://thittivaasal.blogspot.com/2009/08/blog-post.html

பகிர்விற்கு நன்றி லேகா...தொடருங்கள்.

இரவுப்பறவை said...

நல்ல பதிவு...

இவை அனைத்தும் "தேர்ந்தெடுத்த கதைகள்"
என்ற புதிய தொகுப்பிலும் இருக்கிறது.. என்று நினைக்கிறேன்...

WordsBeyondBorders said...

Hi,
There is single collection of all of Ki.Ra's stories. (Till 2004 or 2005 I am not sure. From Annam itself ). It also includes a novella.

Ajay

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வு
மிக்க நன்றி

அ.மு.செய்யது said...

உங்களிடமிருந்து எதிர்பார்த்த பதிவு தான்.பகிர்வுக்கு நன்றி !!

இந்த தொகுப்பில் தான் "கதவு" சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறதா ??

NILAMUKILAN said...

என் மனதுக்கு நெருங்கிய கரிசல் காடு எழுத்தாளர் கி ரா. உங்கள் வாசிப்பு அனுபவம் பிரம்மிப்பூட்டுகிறது. அறிமுகத்திற்கு நன்றி.

பட்டாம்பூச்சிக் கதைகள் said...

நல்ல பகிர்வு நன்றி லேகா.
தொடரட்டும் உங்கள் பகிர்வுகள் வாழ்த்துக்கள்.

பட்டாம்பூச்சிக் கதைகள் said...

நல்ல பகிர்வு நன்றி லேகா.
தொடரட்டும் உங்கள் பகிர்வுகள் வாழ்த்துக்கள்.

லேகா said...

@கிருஷ்ணன் பிரபு

நிச்சயமாய் விலாசம் தெரிந்ததும் சொல்கின்றேன்.

ஞானியின் கேணி இலக்கிய சந்திப்பு குறித்த அறிமுகத்திற்கு நன்றி.

Krishnan said...

நான் அவுட் அண்ட் அவுட் நகரவாசி, எனினும் கிராவின் எழுத்துக்கள் மூலம் கிராமங்களை பார்க்கிறேன்...நன்றி லேகா

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி இரவு பறவை :-)

லேகா said...

அஜய்,

தகவலுக்கு நன்றி.

இந்த முறை சென்னை புத்தக கண்காட்சியில் அன்னம் பதிப்பகத்தின் ஸ்டாலை கண்டு பிடிக்க முடியவில்லை..கி.ராவின் "அந்தமான் நாயகர்" வாங்க எண்ணி ஏமாந்து போனேன் :-(

லேகா said...

வருகைக்கு நன்றி நேசமித்ரன்

லேகா said...

@செய்யது..

சென்ற பதிவில் சொல்லி இருந்தேன்ல..

கதவு சிறுகதை இந்த தொகுப்பில்லை.அதை படித்து வெகு நாட்களாகிவிட்டது..

வருகைக்கு நன்றி..

லேகா said...

நன்றி நிலா முகிலன்..:-)

நன்றி ஷிஜு..:-)

வருகைக்கு நன்றி..

லேகா said...

உண்மை தான் கிருஷ்ணன்..

வருகைக்கு நன்றி!!

குப்பன்.யாஹூ said...

Lekhaa, when u get time please visit:

http://www.sekalpana.com/2009/08/blog-post_3814.html

லேகா said...

நன்றி ராம்ஜி.

நிச்சயம் வாசிக்கின்றேன்.

அது சரி(18185106603874041862) said...

முழு தொகுப்பாக படித்ததில்லை...அவ்வப்போது படித்திருக்கிறேன்...மீண்டும் மீண்டும் சலிப்பேயில்லாமல் படிக்கத் தூண்டுவது அவர் எழுத்து!

Datthathiri said...

அருமையான பதிவு.
கி ரா ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம். அவர் எழுதிய கரிசல் / கிராமிய இலக்கியங்கள் பிற்கால தலைமுறைக்கு ஒரு வரப்பிராச்தம். மனிதர்களை அவர் நுணுக்கமாக வர்ண்ணிப்பது போல் (உதாரணம் கோபல்ல கிராமம் கிராம பஞ்சாயத்து- முக்கியஸ்தர்களை) யாரும் வர்ண்ணிக்க முடியாது. மழை மண்ணின் மீது படும் மணம் அவர் எழுத்துகளை வாசிக்கும் போது உணர முடியும். அந்த எழுத்துக்களை படித்துவிட்டு இப்போது கிராமங்களை பார்த்தால் நாம் எவ்வளவு இழந்து விட்டோம் என்று தெரிகிறது.

Nayagar said...

அவர் ஒரு தகவல் களஞ்சியம்
இன்னும் பல விருதுகள் அவருக்கு காத்திருக்கின்றன
அவரது முகவரி
௦ ௦ ௦ O4, Govt Quarters
Lawspet
Pondicherry605008.

Nayagar
pondicherry