Friday, November 21, 2008

"Me You Them" - பிரசிலிய திரைப்படம்



ஒரு ஆண் தன் வாழ்கையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் சந்தித்த பெண்களை,அவர்களோடு கொண்டிருந்த காதலை,சிநேகத்தை சொல்லும் ஆட்டோக்ராப் திரைப்படம் வெளிவந்த சமயம் இதே கதை ஒரு பெண்ணை மைய படுத்தி வெளிவந்தால் சமூகம் ஏற்குமா என்ற கேள்வி பரவலாய் இருந்தது.அதற்கான சூழலும்,தைரியமும் தற்சமயம் இங்கில்லை.பிரேசிலில் நடந்த நிஜ கதையை மையமாய் கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் மூன்று கணவர்களோடு ஒரே வீட்டில் வசிக்கும் பெண்ணை பற்றியது.படம் பார்க்கும் பொழுது பெரிய அதிர்ச்சியோ,எரிச்சலோ ஏற்படவில்லை,மெல்லிய புன்னகையோடு அதன் போக்கை ஏற்றுக்கொள்ள முடிந்தது.

தாயை இழந்த டர்லீன் கைகுழந்தையோடு அவதியுறும் வேளையில் சற்றே முதியவனான வசதி படைத்த ஓசியாசை மணக்கிறாள்.ஒசியாசின் உறவினான ஜெசின்கோ தன் தாயின் மரணத்திற்கு பிறகு ஓசியாசோடு தங்கி பிழைக்க வருகின்றான்.தன் மீது பிரியம் கொள்ளும் ஜெசின்கோவை ஏற்று குழந்தை பெறுகிறாள்.எப்பொழுதும் வானொலி கேட்டபடி உறங்கும் ஓசியாஸ்,வீட்டு பராமரிப்பு வேளைகளில் தன்னை மூழ்கடித்து கொண்ட ஜெசின்கோ - நாட்கள் செல்ல செல்ல இவ்விருவருக்கு மத்தியில் வாழும் வாழ்க்கை வெறுப்பை தர மெய்யான அன்பை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் கரும்பாலையில் வேலை செய்யும் அழகிய இளைஞனான சிரோவின் உறவை பெறுகிறாள்.

மேலோட்டமாக பார்க்கும் பொழுது இக்கதை பெரும் நகைப்பிற்குரியதாய் தோன்றலாம்.தேர்ந்த இயக்கமும்,வெகு இயல்பான நடிப்பும் நம் பார்வையை மாற்றி அமைக்கின்றன.குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரு விஷயங்கள் படம் நிகழும் இடம் மற்றும் பின்னணி இசை.வடகிழக்கு பிரேசிலில் அமைந்த புழுதி பறக்கும்,வறண்ட கிராமம் ஒன்றில் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மஞ்சள்,ஆரஞ்சு,பிரவுன் என மாறி மாறி காட்சிக்கு தகுந்தாற்போல ஒளி அமைப்பு சிறப்பாய் கையாளப்பட்டுள்ளது.மழை காணாது வறண்ட நிலங்களும்,ஆலிவ் மரங்களும் காமிராவில் பதிவு செய்துள்ள விதம் அருமை. மனதை வருடும் பின்னணி இசை நெருடலின்றி படம் முழுதும் தொடர்கின்றது.வசனம் ஏதும் இன்றி பத்து நிமிடங்களுக்கு மேலாக நீளும் இறுதி காட்சிக்கு பின்னணி இசை பெரும் பலம்.

தனக்கான தேவைகள் எதையுமே டர்லீன் திட்டமிட்டு நிறைவேற்றி கொள்ளவில்லை.வாழ்கை அதன் போக்கில் ஏற்று நடத்தும் பெண்ணாய் இருக்கின்றாள். டர்லீனின் கணவர்கள் அவளின் விபரீத முடிவுகளை கண்டு அவளிடம் எதிர்ப்பு காட்டாது அவள் வாழ்கையை அவள் முடிவில் விட்டுவிட்டு தாமும் அவளை பிரிய மனம் இன்றி ஒன்றாய் வாழ்வை தொடர்கிறார்கள். 2000 ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் கேன்ஸ்/டோக்யோ/டொராண்டோ திரை விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.

15 comments:

KARTHIK said...

வண்ணதாசனும் வண்ணநிலவனும் பொறுத்துக்கொள்வார்களாக :-))

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சினிமா பதிவு.

// வசனம் ஏதும் இன்றி பத்து நிமிடங்களுக்கு மேலாக நீளும் இறுதி காட்சிக்கு பின்னணி இசை பெரும் பலம்.//

சுப்ரமணியபுறம் படத்துல பரமன் கேரக்டர கொன்னதுக்கப்புரம் கஞ்சாகருப்பு வரும் போதும் இப்படித்தான் ஒரு அஞ்சு நிமிஷம் வசனம் இல்லாம வெறும் காட்சி மட்டுமே நகரும்.

சிட்டி ஆப் காட்ன்னு ஒரு பிரேசில் படம் இருக்கு கெடச்சா அதையும் பாருங்க.

நல்ல விமர்சனங்க.

குப்பன்.யாஹூ said...

அருமையான பதிவு, அறிய திரைபடத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

எப்படி நேரம் உருவாக்கி கொள்கிறீர்கள், வாசிக்க, திரை படம் பார்க்க எல்லாம்.

உங்கள் ஆர்வம் பாராட்டுதலுக்கு உரியது.

குப்பன்_யாஹூ

மாதவராஜ் said...

லேகா!

நல்ல பதிவு.

ஆட்டோகிராப் குறித்த விமர்சனம் எனக்கும் இருக்கிறது.
ஒரு பெண்மனதின் காதலை, அன்பை, அதை வெளிப்படுத்தும் நேர்மையை நமது மண்ணில்தான்
ஏற்றுக்கொள்வதில் மனச்சிக்கல்கள் இருக்கின்றன.
அற்புதமான "அவள் அப்படித்தான்' படத்தை இங்கு வெகுசிலரே ரசித்தார்கள்.
மேற்கத்திய உலகம் அதை எப்போதோ தாண்டியிருக்கின்றன.
இங்கு அப்படியொரு கதை கூட எழுதப்பட்டதாய் தெரியவில்லை.
அங்கு இப்படிப்பட்ட பல கதைகளைச் சொல்ல முடியும்.
ஏன், கார்க்கியும் ஒரு சிறுகதை எழுதியதாக ஞாபகம்.

அந்தப் படத்தில் வருகிற நெருடலற்ற இசை போலவே, உங்கள் பதிவும்
மிக எளிமையான வார்த்தைகளால் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தை எங்கு பார்த்தீர்கள்?

நன்றி.

Krishnan said...

Quite interesting subject for a mobie. I can only think of our own Panchali, but then she did not get into wedlock with other Pandava brothers on her own will but was kind of forced. Thanks a lot Lekha for sharing it with us.

லேகா said...

நன்றி கார்த்திக்.

//சிட்டி ஆப் காட்ன்னு ஒரு பிரேசில் படம் இருக்கு கெடச்சா அதையும் பாருங்க//

பார்க்க முயற்சிகின்றேன்,பகிர்தலுக்கு நன்றி :-)

லேகா said...

நன்றி குப்பன்_யாகூ.

லேகா said...

@மாதவராஜ்

//ஒரு பெண்மனதின் காதலை, அன்பை, அதை வெளிப்படுத்தும் நேர்மையை நமது மண்ணில்தான்
ஏற்றுக்கொள்வதில் மனச்சிக்கல்கள் இருக்கின்றன//


ரொம்ப சரியா சொன்னீங்க!!

இத்திரைப்படம் வெகு நாட்களுக்கு முன்பு ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் பார்த்த நியாபகம்.இதன் கதையாடலும்,காட்சி அமைப்புகளும்,இசையும் ஈர்க்கவே வலைத்தளத்தில் இத்திரைப்படம் குறித்து தேடிய பொழுது கிடைத்த தகவல்கள் சுவாரசியமாகவே இருந்ததன.

லேகா said...

tnx for ur comments krishnan

பிச்சைப்பாத்திரம் said...

பட அறிமுகத்திற்கு நன்றி.

லேகா said...

நன்றி சுரேஷ் :-)

narsim said...

//மேலோட்டமாக பார்க்கும் பொழுது இக்கதை பெரும் நகைப்பிற்குரியதாய் தோன்றலாம்.தேர்ந்த இயக்கமும்,வெகு இயல்பான நடிப்பும் நம் பார்வையை மாற்றி அமைக்கின்றன.குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரு விஷயங்கள் படம் நிகழும் இடம் மற்றும் பின்னணி இசை//

லேகா.. இந்த எளிய வரிகளில் முழுப்படத்தையும் பார்த்த/ பார்க்கும் உணர்வை தூண்டி விட்டீர்கள்..

நல்ல அறிமுகத்திற்கு நன்றி..

நர்சிம்

லேகா said...

நன்றி நர்சிம் :-)

anujanya said...

நல்ல அறிமுகம் லேகா. பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் வருகிறது.

அனுஜன்யா

லேகா said...

நன்றி அனு :-)

butterfly Surya said...

நல்ல பதிவு.லேகா!

எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியலை..

பார்த்து விட்டு மீண்டும் பறந்து வருகிறேன்.